Friday 27 May 2016

உதகையில் 120-வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது

உதகையில் 120-வது மலர்க் கண்காட்சி அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று காலை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்.

இந்த மலர்க் காட்சிக்காக பூங்காவில் பல்வேறு மலர்களாலான வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பிடத்தக்க அம்சமாக ஒரு லட்சம் காரனேஷன் மலர்களைக் கொண்டு மணிகூண்டுடன் கூடிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்புறத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 68 அடி உயரத்திலும், 30 அடி அகலத்திலும் இந்த மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, சுமார் 10,000 காரனேஷன் மலர்களைக் கொண்டு இரட்டைக்குருவி உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் உள்ள காட்சி மாடத்தில் துலிப், கிரசாந்திமம், பிண்டுஷன் போன்ற வெளிநாட்டு மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் நெதர்லாந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும். அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் விளையும் கொய் மலர்களான ஜெர்பரா, காரனேஷன், லில்லியம் மற்றும் கிரசாந்திமம் போன்ற மலர்களும் காட்சி மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன. காட்சி மாடத்தில் மட்டும் 15,000 மலர்த்தொட்டிகளும், புது பூங்காவில் 6,000 மலர்த் தொட்டிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment