துணை வணிக வரித்துறை அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், சார்–பதிவாளர், தலைமை செயலக உதவி பிரிவு அதிகாரி போன்ற பணிகளுக்கான குரூப்–2 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 2015–ம் ஆண்டு இந்த பணிகளுக்காக 1,094 இடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26–ந் தேதி நடந்தது. இதில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 266 பேர் பங்கேற்றனர். இவர்களில் 12 ஆயிரத்து 337 பேரை தேர்வு செய்து வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவுகளை அறிவித்துள்ளது. முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 21–ந் தேதி மெயின் (எழுத்து தேர்வு) தேர்வு நடக்க உள்ளது.
அந்த தேர்வில் ஒரு இடத்துக்கு 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் நடக்க இருக்கும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதேபோல கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணிக்கு குரூப்–3 பிரிவில் 24 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3–ந் தேதி நடந்தது. இதில் 46 ஆயிரத்து 797 பேர் பங்கேற்றனர். இவர்களில் 54 பேர் வருகிற ஜூன் மாதம் 6–ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment