Thursday 9 June 2016

ஆட்டை விற்று, மனைவி நகையை அடகு வைத்து.. டாய்லெட் கட்டிய கூலித் தொழிலாளி!

ராஜஸ்தானில் கூலித் தொழிலாளி ஒருவர் தன் ஆட்டை விற்றும், மனைவியின் நகையை அடகு வைத்தும் கழிப்பறை கட்டி மற்றவர்களுக்கு முன்னுதாரணம் ஆகியுள்ளார். பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று, 'ஸ்வச் பாரத்'. இதன்படி, தேசிய துாய்மை இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் கழிப்பறை வசதியில்லாத வீடுகளில், கழிப்பறை கட்டுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், பாஜக ஆளும் ராஜஸ்தானில் துங்காபுர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான காந்தி லால் ராட், தனது வீட்டிலும் கழிப்பறை கட்ட விரும்பியுள்ளார். 

ஆனால், அதற்குத் தேவையான பணம் அவரிடம் இல்லை. அப்போது அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மூலம், கழிப்பறை கட்ட அரசு மானியம் வழங்குவது குறித்து அவருக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அரசின் மானியத்துடன் தன் வீட்டில் கழிப்பறை கட்டத் தொடங்கினார் காந்தி லால். ஆனால், இறுதியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதற்கு அவரிடம் பணம் இல்லை. எனவே, தான் ஆசையாக வளர்த்த ஆட்டை விற்றும், தனது மனைவியின் கால் கொலுசை அடகு வைத்தும் கட்டிடத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தார். இது குறித்து காந்தி லால் கூறுகையில், "எனது ஏழு ஆடுகளை ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன். ஆனபோதும் பணம் பத்தவில்லை. எனவே, என் மனைவியின் கால் கொழுசுகளை நான்காயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தேன். அவை எங்கள் திருமணத்தின் போது என் மனைவிக்கு அவரது பெற்றோர் அன்பளிப்பாக அளித்தது. ஆனால், வீட்டில் கழிப்பறை இல்லாமல் வெளியிடங்களுக்குச் சென்று அவதிப்பட்டு வருவதால், என் மனைவியே மகிழ்ச்சியுடன் அவரது கொலுசை கழிப்பறை கட்ட என்னிடம் அளித்தார்" எனத் தெரிவித்துள்ளார். 

எப்படியும் வீட்டில் கழிப்பறை கட்டியே தீருவது என செயல்பட்டு, தன் முயற்சியில் வெற்றி பெற்ற காந்திலாலைப் பாராட்டி துங்காபுர் மாவட்ட நிர்வாகம் அவருக்கு நான்காயிரம் ரூபாய் பரிசளித்துள்ளது. கூடவே, கழிப்பறை கட்டுவதற்கான அரசு மானியத்தின் மீதி தொகையும் உடனடியாக விடுவிக்கப்பட்டது. இதன்மூலம், மீண்டும் தனது மனைவியின் கொலுசை அடகில் இருந்து மீட்டுள்ளார் காந்திலால்.

No comments:

Post a Comment