இந்திய கடற்படையில் உள்ள சில குறிப்பிட்ட போர்க்கப்பல்களில் பணிபுரிய பெண் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நாரி சக்தி கனவு நனவாகிறது. கடற்படைக்கு சொந்தமான சில போர்க்கப்பல்களில் பணிபுரியும் வாய்ப்பு பெண் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு இந்திய விமானப்படை தனது போர் விமானங்களில் பெண்களை பணியமர்த்த முடிவு செய்தது. போர் விமானங்களை இயக்க நான்கு பெண் விமானிகள் ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்கள். அவர்கள் வரும் ஜூன் மாதம் போர் விமானங்களை இயக்கும் பணியில் சேர்கிறார்கள். போர்க்கப்பல்களில் பெண்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளதன் மூலம் சவால்களை எதிர்கொள்ள துடிக்கும் பல பெண்கள் கடற்படையில் சேர்வார்கள். முதல்கட்டமாக 7 பெண் அதிகாரிகள் போர்க்கப்பல்களில் பணியாற்ற உள்ளனர். இது குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த சில மாதங்களில் பெண்கள் முன்னேற்றம் குறித்து கடற்படையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆண்களுக்கு சமமாக பெண் அதிகாரிகளுக்கும் வாய்ப்பு அளிக்கும் முக்கியத்துவத்தை கடற்படை உணர்ந்துள்ளது என்றார். இது பற்றி கடற்படை பெண் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய கடற்படையில் புதிய சகாப்தம் துவங்கியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment